×

விவசாயிகள் போராட்டம்: பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டால் முடக்கம்?.. எக்ஸ் நிர்வாகம் விளக்கம்

டெல்லி: இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் குறித்து பதிவிட்டு வந்தவர்களின் எக்ஸ் பக்கம் முடக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் குறிப்பிட்ட கணக்குகளை முடக்க இந்திய அரசு தான் உத்தரவிட்டதாக எக்ஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் மற்றும் விடியோக்களை பதிவிட்டு வந்தவர்களின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து பலர் கேள்வி எழுப்பிய நிலையில் எக்ஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த செயலியின் சர்வதேச அரசு விவகாரம் பிரிவு பக்கத்தில் குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை முடக்கம் வேண்டும் என இந்திய அரசு தங்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு செய்ய தவறினால் தங்கள் நிர்வாகிகளுக்கு அபாரதமோ, சிறை தண்டனையோ விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த உத்தரவின்படி குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகள் இந்தியாவில் மட்டும் முடக்கப்படுவதாக தெரிவித்திருக்கும் எக்ஸ் நிர்வாகம் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை தாங்கள் ஏற்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. இந்திய அரசின் உத்தரவுக்கு எதிரான தங்களது ரெட் மனு நிலுவையில் இருக்கும் நிலையில் முடக்கப்பட்ட கணக்குகளின் உரிமையாளர்களுக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய அரசின் உத்தரவுகள் குறித்தும் முழுமையான தகவல்களை வெளியிட முடியவில்லை என்றும் ஆனால் அவை வெளியிடப்பட வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் எக்ஸ் நிர்வாகம் தமது பதிவில் தெரிவித்துள்ளது.

The post விவசாயிகள் போராட்டம்: பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டால் முடக்கம்?.. எக்ஸ் நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : BJP government ,Delhi ,India ,Indian government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்..!!